Tuesday, December 25, 2018

2004ம் ஆண்டு இந்து சமுத்திர சுனாமியின் அதிர்வலைகள்


2004ம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களை தாக்கியது. பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் காவு கொண்டது. இன்றையைப்;போல ஒரு அமைதியான காலைப்பொழுதிலே இலங்கையின் பெரும்பாலான மக்கள் தன்வாழ்நாளிலே கேட்டிராத அந்த சொல் வரலாற்றின் சொல்லாக மாறியது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் விடுகை வருட மாணவனாக இறுதிப் பரீட்சைக்கு இரண்டு வார கால விடுமுறை அறிவிக்கப்பட்டு பரீட்சைக்கு தயார்படுத்திக்கொண்டிருந்த காலப்பகுதி அது 2004ம் ஆண்டின் இறுதி வாரம்.

26ம் திகதி காலை தான் பிறந்த ஊரின் அவலம் எதுவென அறியாது பல்கலைக்கழகத்தின் விடுதியிலிருந்து அல்குர்ஆன் கற்கைக்கான ஒரு வகுப்பில் கலந்து கொள்ள கண்டி நகருக்கு சென்றுவிட்டேன். மாலை 3 மணிக்கு பல்கலைக்கழக விடுதிக்கு மீண்டும் திரும்பி வரும்வரை எதுவுமறியாதிருந்த எனக்கு நண்பர்கள் சொன்ன சொல் தான் சுனாமி.

பொறியியல் கற்கைநெறியில் சுனாமி தொடர்பான ஒரு பாடத்தை தாங்கள் கற்றதாக சிவில் பொறியியல் துறை மாணவர்கள் அதைப்பற்றிய விளக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள். வீட்டுத்தொலைபேசியை அழைத்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிசினால் உடனடியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதாக முடிவுசெய்யப்பட்டது. நானும் இணைந்து கொண்டேன். மறுநாள் 27ம் திகதி அதிகாலை சாய்ந்தமருதை வந்தடைந்து வீடு சென்று உம்மாவிடம் வந்துவிட்டதை அறிவித்து விட்டு கல்யாண வீதியின் மறுபக்கம் (கிழக்குப்பகுதி) சென்றேன். ஒரு கனம் அதிர்ந்து அசையாது நிலைதடுமாறி நின்றேன் எனது ஊரின் நிலை கண்டு. வாழ்நாளிலே என் கண்கள் பார்த்திராத அந்த சோகம் என் மனதிலே இறைநியதியையும் இறைவனின் தீர்ப்பையும் ஏற்க மறுத்தது. \

கடல் கொண்ட கோபத்திற்கு ஏன் இறைவனின் தீர்ப்பை மறுக்க வேண்டும் என எண்ணத்தோன்றியது. இல்லை நாமும் நம் சமுகமும் செய்த செயல்களுக்கான விளைவை இறைவன் கடல் மூலம் சோதனை செய்துள்ளான் எனும் வார்த்தைகள் என் காதுகளுக்கு கேட்கிறது. ஆனால் பேசுவதற்கு நேரமில்லை. இன்னும் மையித்துக்களை கண்டுபிடித்து அடக்கம் செய்து முடியவில்லை. அன்றே என் உள்ளத்தில் மனிதாபிமானம் என்ற சொற்பிரயோகம் அதன் ஆழ அகலம் புரியாமல் விதைக்கப்பட்டது. 2004ம் ஆண்டு 26ம் திகதிக்கு முன் சமூக செயற்பாடு சமூக சேவை என்றிருந்த எனது வாழ்கையின் இலட்சியம் மனிதாபிமான சேவையே சமூகத்திற்கான எனது கடமை என்பதை மாற்ற ஆரம்பித்தது.

அன்றிலிருந்து இன்று 14 வருடமாக என் வாழ்கையின் தொழில் சார் துறையாக மட்டுமல்ல எனது தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் மானிதாபிமான செயற்பாட்டாளனாக அத்துறையில் பயிற்றுவிப்பவனாக ஆராய்ச்சி செய்பவனாக அது பற்றி மக்களுக்கு விளிப்பூட்டுபவனாக என்னை நான் செதுக்கினேன். இது சமூகக்கடமையாகவும் இறை திருப்தியை நாடி செய்யும் மனநிறைவுடனான வாழ்கையாகவும் மாற்றியமைத்துக்கொண்டேன் என்றே சொல்ல வேண்டும்.

மனிதாபினம் அனர்த்த உதவி வேலை என்னை உலகிற்கே அறிமுகப்படுத்தியது. இன்ஸா அல்லா அது தொடரவேண்டும் என்பதுவே என ஆசை.  அதையே எனக்கு இறைவன் எனது துறையாக கலையாக அறிவாக செயற்பாடாக ஆக்கியிருக்கிறான் என்ற மன நிம்மதியோடு இறைவனின் இருப்பையும் அவனின் படைப்புக்கள் நியதிகள் உலக ஓட்டம் மறுமையின் உண்மைத்தன்மை எல்லாவற்றையும் ஓரே இடத்தில் குவிக்கும் இத்தொழிலை தொண்டை மனமாற செய்வதில் தன் கடமையை நிறைவுற செய்த திருப்த்pயுடன் இறைவனை நோக்கி மீண்டும் செல்லும் பாதையாக அவனை அதை அமைத்திருக்கிறான்.

படங்கள் - சிரேஸ்ட ஆசிரியர் எம். ஜ. எம். அஸ்ஹர்